கொரோனா-ஊரடங்கு இவை இரண்டுக்கும் இடையில் சிக்கிய உழைக்கும் மக்கள் நிலை ?.

தோழர் அருண்

தோழர் அருண் பொதுநல மாணவர் எழுச்சி இயக்க (sums) மாநில உறுப்பினர். கோவை அரசு கலைக் கல்லூரியில் எம் ஏ அரசியல் அறிவியல் இரண்டாம் ஆண்டு மாணவன்.

தோழர் அருண் எழுதுகிறார் ….

மேட்டுப்பாளையம் வெண்மணி நகர் கொடும் நோய்தொற்று கொரோனா – ஊரடங்கு இவற்றின் நிகழ்காலமும் – எங்களின் எதிர்காலமும்..!

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்கள்,பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மக்களால் பஞ்சமி நில மீட்பு போராட்டம் மூலம் உருவானதே வெண்மணி நகர் எனும் பகுதி .இங்கு குடிசை வீடுகளுடன் தற்போது 96 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .கடந்த 11 ஆண்டுகளாக இங்கு மின்சாரம், சாலை,சாக்கடை என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காத அரசு சென்ற ஆண்டுதான்(2019) அரைகுறையான மின்சார இணைப்பு வசதி செய்து தந்தது. அடுத்ததாக ரோடு,சாக்கடை வேலைகள் ஆரம்ப நிலையில் தான் உள்ளது.கடந்த ஆண்டுகளில் நமது மக்கள் கண்ட துயரம் என்பது சிறிதல்ல .வெயில் காலத்தில் அதிகபடியான வெப்பத்திலும் ,குளிர்காலத்தில் பொருட்படுத்த முடியாத குளிரிலும் மற்றும் மழை, காற்று, இடி இவற்றால் ஏற்படும் இழப்பு வீடுகள் உடைமைகள் மற்றும் சில நேரங்களில் உயிர் இழப்பும் நடத்தியுள்ளது. ஆம் சில ஆண்டுக்கு முன்பு இடி விழுந்ததால் ஒருவர் உயிர் இழந்தார் மற்றும் ஒருவர் தீ காயம் அடைந்தார் . இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகும் .இங்கு சுமார் 100 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் (மாணவர்கள்) இருப்பதை அறிந்தும் அரசு தொடக்கப்பள்ளி ,ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நூலகம் குடிக்க குடிநீர் என எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்துதராத இந்த அரசா எங்களை உலக நாடுகளையே அச்சுறுத்தும் கொரோனா எனும் பெருந் தொற்று நோயிடம் இருந்து காப்பாற்ற போகிறது. வேலைக்கு போனால் தான் சோறு என வாழும் எங்களுக்கு இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு உணவு சார்ந்த உதவியும் செய்யாத அரசு 1000 ரூபாய் கூட 16 நாட்கள் கழித்த பின்புதான் எங்களுக்கு வழங்கியது மற்றும் பொருட்கள் வந்தடைய மேலும் 4 நாட்கள் ஆயின. இதுவும் இந்த விலாசத்தில் இருக்கும் குடும்பத்தாருக்கு மட்டும்தான். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் முகவரியை மாற்றாத நிலையில் அந்த அடிப்படை உணவு பொருட்களும் இன்றி தவிக்கும் நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் பொருட்படுத்தாத அரசால் ஏற்படும் பாதிப்புகள் மேலும் பல உள்ளன.

மேட்டுப்பாளையம் வெண்மணி நகர் சாலை.

கொடும் நோய் தொற்று கொரோனா – ஊரடங்கு இவை இரண்டுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் நமது வெண்மணி நகர் மக்களின் நிலை ?

கொடும் நோய் தொற்று கொரோனா வைரஸ் நோய் டிசம்பர் 01 ,2019 ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரில் உருவானதாக நாம் அனைவரும் செய்திகள் மூலம் அறிந்தோம். அதன் பின் ஒரு மாதத்தில் பல நாடுகளுக்கும் பரவியது. அதன்படி இந்தியாவிலும் இந்நோய் பலருக்கும் பரவியது .உணமையில் அரசின் அலடசியப் போக்கால் பரப்பப்பட்டது என சொல்வதே சரியானதாக இருக்கும். இந்தியாவில் இந்த கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த , இந்திய அரசு 22 .03 .2020 ஆம் தேதி ஊரடங்கு அறிவித்தது. அதன்பின் 24 .03 .2020 அன்று இரவு 8 மணிக்கு எப்போதும் போல திடீரென்று தோன்றும் பிரதமர் மோடி அடுத்து 21 நாட்கள் அதாவது 14 .04 .2020 தேதி வரை ஊரடங்கு என்று அறிவிப்பு செய்தார்.

அன்றன்று வேலைக்கு போனால் தான் சோறு, இப்படி வாழ்ந்துகிட்டு இருக்கிற நம்ம மக்கள் வேலை இல்லாமல் திங்க சோறு இல்லாமல் கஷ்டப்படுறாங்க இது மட்டுமில்லாமல் கூடவே ஒரு பெரிய பயமும் இருக்கு அது வேற ஒண்ணுமில்ல வீட்டை விட்டு வெளியே போனால் கொரோனா புடுச்சுடுமோ அல்லது போலீஸ் அடுச்சுடுமோ என்ற பயத்தில் தான் இருக்காங்க .இருந்தும் நம்ம மக்கள் தினமும் காலையில ஒரு கிலோமீட்டர் வீட்டுக்கு வெளியே நடந்து போய் காட்டுக்கு போயிட்டு வராங்க. பின்ன என்ன பண்ண, வீட்டில் கக்கூஸ் இல்லையே வெளியே போகலேனா வீடு நாறிடுமே அதனாலதான்.

தினமும் நண்பர்களோடு கூடி பொழுதை கழிக்கும் இளைஞர்கள் பார்க்க கூட முடியாமல் இருக்க சிரமப்படுவார்கள். அதைவிட சிரமம் தினமும் குடிக்கிறவங்க சிலநாள் குடிக்காமல் இருக்கிறது அதனாலோ என்னவோ எங்க ஊரில் இருக்கிற அந்த கட்டட வேலை செய்யறவங்க டாஸ்மாக் திறந்து இருக்கா இல்லையா என தினமும் யாரிடமாவது கேட்பதும் அல்லது நேரா போய் கடையை பார்பதும் இது ஒரு பக்கம் நடக்க நாள் 5,6 என ஓடூனநால கையில இருந்த 1000, 500 காய்கறி, அரிசி, பருப்பு இதிலேயே முடிஞ்சுருச்சு .ஏதோ போன மாசம் வாங்கி வச்ச அந்த ரேஷன் அரிசி ஓரளவுக்கு கை கொடுக்குது ,என்ன அதுல கொஞ்சம் கல்லுதான் சுத்தம்பன்னனும், என்ன 23 ,24 தேதிகளில் காரமாட்டி ஏதோ சுண்டல் அல்லது சோயா குழம்பு இப்படி இருந்த எங்க வாழ்நிலை 30 ,31ம் தேதியில் தக்காளி சட்னி அல்லது ரசம் என வாழ்நிலை மாறியது இது அடுத்ததா கஞ்சிக்கு மிளகாய் என மாறக்கூட சில நாள் தான் இருக்கு .இந்த நிலைமை சாப்பாட்டுக்கு மட்டும் இல்ல,காலையில குடிக்கிற டீக்கும் சேத்தி தான் (வித்தவுட் மில்க் ,பிளாக் டீ காபி) வரட்டி.இவை அனைத்தும் காஷ்மீர் மக்களின் வாழ்நிலை பற்றி எங்களை சிந்திக்க வச்சிருக்கு , ஆம் ஆண்டு கணக்காக ஊரடங்கில் இருப்பதைப் பற்றியும் மற்றும் தோழர் கௌதம் நவ்லாகா எழுதிய காஷ்மீர் அமைதியின் வன்முறை என்ற புத்தகத்தை வாசிப்பதன் மூலம் காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அத்துமீறல் சிறுவர் முதல் முதியவர் வரை பல தரப்பினர் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல்,வன்புணர்ச்சி, படுகொலை, சித்தரவதை, பெருந்திரளான மக்கள் கொன்று புதைப்பது இதுதான் அங்கு அன்றாடம் நடக்கிறது .இங்கு அதைக் காட்டிலும் சிறிது குறைவுதான். காரணம் இணையம் துண்டிக்கப்படவில்லை, கடைகள் மதியம்வரை திறந்திருக்கிறது .இருப்பினும் மதியம் வரை திறந்திருக்கும் கடைகளுக்குச் செல்லும் பொதுமக்களை போலீஸ் அடிப்பதும் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் பலருக்கு வழக்குபதிவு,கைது, அடிப்படை தேவைகளுக்காக வெளியே செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதும் அதனை திரும்பபெற மணிக்கணக்கில் காவல்நிலையத்தில் நிற்க வைக்கப்படுவதும் என போலீஸ் ஆட்சியே நடத்தப்படுகிறது . ஆகவே நாம் நம்புவோமாக இது ஒரு ஜனநாயக நாடு என்பதை .

இப்படி இருக்கிற சூழலில் எங்களைப் போன்றவர்களின் நிலைமையை நினைக்கும்போது (அப்புச்சி கிராமம்) படத்தில் வரும் வசனம் போல் அரசு அறிவிக்கும் திட்டங்கள் எங்க ஊருக்கு வர பல வருஷம் ஆகுது ஆனால் இரண்டு நாளைக்கு முன்னாடி சொன்ன விண்கல் மட்டும் எங்க ஊருக்கு எப்படி வந்துச்சு?

அது போலவே எங்கள் பகுதி உருவாகி 11 வருஷம் ஆகிறது .இப்ப வரைக்கும் ரோடு ,சாக்கடை வசதிகள் என ஏதும் முழுசா வந்து சேரலை ,இதுல சீனாவில் இருந்து வைரஸ் மட்டும் மூனு மாசத்தில் எங்க ஊருக்கு வருமா என்ன?

அப்புறம் எதுக்கு இந்த அரசு வயித்துல அடிக்குது (பசி)…. இந்த போலீஸ் முதுகில் அடிக்குது?

அக்காங்க ரெண்டு பேர் :-

வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிற காசு அரிசி பருப்பு முடிய போகுது , இனி நாள் என்ன பண்ணி மீதி நாள கடத்துரது தெரியல

ரேஷன் ல ஆயிரம் ரூபாய் அரிசி தராங்கலாமா?

அதுசரி மூணு மாசம் கேஸ் இலவசமா ,,??!! எதுக்கு ஒருவேளை மூணு மாசம் ஊரடங்கு தெரிவிக்க போறாங்களா !?

இல்லடி அப்படி இருக்காது வாய்ப்பே இல்ல ,இப்பவே யாருக்கும் சோறு இல்ல ,வீட்டில இருக்கவும் முடியல , இதுல இன்னும் மூணு மாசமா !!!

என்னமோ அதை விட இந்த வார குழுவும் ,மாச குழுவும் ஊரடங்கு முடிந்த பின்பு ஒரே முட்டா ரெண்டு மத குழு பணமும் கட்டணுமா என்ன ?

அப்படிதான் இருக்கும் கந்துவட்டி காரனுக்கு பணம் கட்டிட்டியா?

இல்ல ஏன்டி

கந்துவட்டி ,குழுவுக்காரங்க என யாருமே ஊரடங்கு முடியும் வரை வர மாட்டாங்க

அப்பாடா ரொம்ப நிம்மதி ,கொஞ்ச நாள் கடன் தொல்லை இல்லாமல் இருக்கலாம் ஆனா என்ன
சோத்துக்கு தான் பிரச்சனையே?

குழந்தைகளும்/ இளைஞர்களும்.

கல்லூரி பயிலும் மாணவர்கள் சரி பாதியில் பள்ளிபடிப்பை விட்ட இளைஞர்களும் சரி வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வந்த நிலையில் நிலமை இன்னும் சிரமமாக மாறியது பசி,பட்டினி,உணவு பற்றாக்குறை ஒருப்புறம் இருக்க மறுபுறம் *வீட்டில இருக்க முடியல ,காரணம் கரண்ட் இல்லை, *விளையாட முடியல, காரணம் விளையாட்டு மைதானம் இல்ல, *ஓய்வு எடுக்க முடியல, காரணம் மர நிழலும் இல்லை. வெயில் மட்டும் உண்டு ,வெளியே போக முடியல ,காரணம் போலீஸ் அடிக்கராணுங்க என்ன செய்வோம் நாங்கள். வைரஸ் பற்றிய கவலையைக் காட்டிலும் இந்த ஊரடங்கு நாட்கள் பற்றிய கவலையே அதிகமாக வைத்துள்ளோம் .

போலீஸ் அராசகம்.

கொரோனா பீதியில்

என்னதான் பலர் கொரோனா விடவும் பசிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சிலர் கொரோனாவுக்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள். எங்கள் பகுதி கடைக்காரர் ரூபாய் நோட்டுகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீரால் கழுவி கழுவி தான் வாங்குவார் ,மற்றவர்களுக்கும் கழுவி தான் தருகிறார் .இதனைப் பார்க்கும் மற்றவர்கள் பீதி அடைகின்றனர் .இவற்றுக்கு சில பத்திரிக்கை – ஊடகங்களின் சமூக அக்கறையற்ற போக்கு தான் காரணம்.சமூகத்தில் நடக்கக்கூடிய உண்மைகளை ஆராய்ந்து உறுதிபட மக்கள் இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டிய உயரிய பொறுப்பு வகிக்கும் ஊடக துறை இன்று பெரும்பாலும் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டவையாகவே செயல்படுவதை பார்க்க முடிகிறது .இன்றைய சூழலில் அரசும் – காவல்துறையும் கூறுவதுதான் செய்தி இப்படி தான் இன்றைய பத்திரிக்கை – ஊடகங்கள் செயல்படுகிறது .தற்போது கொரோனா – ஊரடங்கு இவற்றால் நகரங்களில் நடக்கும் பல நிகழ்வுகளை கூட மறைக்கடிக்கபடுகிறது .லட்சக்கணக்கான மக்கள் வாழும் நாகரங்களிலே இந்த நிலமை என்றால் கிராம்புறங்களில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி எந்த ஊடகங்கள் பேச போகிறது .இதே நேரத்தில் தான், வளர்ச்சி வல்லரசு போன்ற கனவுகளில் இருக்கும் நாடுகள் தனது நாட்டு மக்களின் வறுமையை தீர்க்க முடியாத நிலையில் இருப்பதை பார்க்கையில் வேடிக்கையாகவே இருக்கிறது .மற்றும் உலக நாடுகள் மத்தியில் தன்னை வளர்ந்த நாடாக அறிவிது கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட கொரோனா நோய்க்கான மருந்து கண்டுபிடிக்காமல் இருப்பதும் மற்றும் வளரும் நாடுகளின் பட்டியலில் இருக்கும் இந்தியாவிடம் தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி (ஹைட்ராக்‌ஸிகுளோரோகுயின்) மருந்தை பெறுவதில் இருந்தே தெரிகிறது இந்தியாவின் இறையாண்மை பற்றி மக்கள் அறிந்து கொள்ள இயலும். அரசு இயந்திரம் காவல்துறையைப் பயன்படுத்தி எந்த மக்களின் எத்தகைய வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் மக்கள் நீதி கேட்டு வீதிக்கு வரும்போது , அதனை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்றுவதும் அதன் பின் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிதுறையை பயன்படுத்தி தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்குவதையும் பார்க்க முடிகிறது.

மருத்துவர்கள்:-

மருத்துவர்கள் நோயாளிகளை பார்த்த காலம் கடந்து நோயாளிகளாக மருத்துவர்கள் மாறிய நிலையை பார்க்கமுடிகிறது. காரணம் அரசின் அலட்சியம் தான் கொரோனா வார்டில் இருக்கும் மருத்துவர்களுக்கு போதுமான,தரமான மாஸ்க் உட்பட அடிப்படையான சுய பாதுகாப்பு உபகரணங்களைக் (PPE) கூட தராத நிலையில் மருத்துவர்களுக்கு நோய் தொற்று பரவுவதும். இதற்கெதிராக பேசும் மருத்துவர்களை பணி மாற்றம் செய்யப்படுவதையும் சமூக ஊடகங்களில் பார்கிறோம் மருத்துவர்களை கூட பாதுகாத்திடாத வக்கற்ற அரசு தான் இந்த மக்கள் விரோத மத்திய – மாநில அரசுகள்.

குடிசை அல்லது சிமெண்ட் வீட்டில் வசிக்கும் மக்களின் நிலைமை இப்படி இருக்கும் போது டெல்லியில் இடம்பெயர்ந்து வேலை செய்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு டெல்லியில் இருந்து உத்திர பிரதேசம்,ஒரிசா,மேற்கு வங்கம் என 500 – 1000 கிலோமீட்டர் வரை தங்களின் குழந்தைகளோடு உணவின்றி நடந்தே செல்லும் செய்தியை சமூக ஊடகங்களில் பார்க்கும்போது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. இத்தகைய மக்கள் துயரங்களுக்கு மத்திய – மாநில அரசுகளின் அலட்சியமே முக்கிய காரணம் ஆகும்.

இதுல வேற மக்களுக்கு நிதி தரவேண்டிய ஆட்சியாளர்கள் உணவின்றி தவிக்கும் மக்களிடம் நிதி கேட்பதை நினைத்தால் த்தூதூ என்று துப்புவதுடன் விடாமல் மக்களின் நலனை முன்னிறுத்தும் சமூக மாற்றத்துக்கான அரசியலை முன்னெடுப்பதன் தேவையும்,அதில் நமது பங்கும் மிக முக்கியமானது என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது. கொரோனா போன்ற கொடும் நோய்களுக்கு காரணமான சமூக காரணிகளை கண்டறிவதும்,அதற்கான நமது சமூக கடமைகளை ஆற்றுவதும் நமது அனைவரின் தலையாய பணியே ஆகும் …ஆம் அனைவரும் வாருங்கள் …